15.12.11

முல்லைப் பெரியாறு அணை வரலாறு- பாகம் 2

       நான் முல்லைப்பெரியாறு அணை உருவாக்கப்பட்டதன் பிண்ணனியை சென்ற இடுகையில் வலையேற்றி இருந்தேன்.அந்த அணை எந்தவொரு உயர்ந்த நோக்கத்துடன் அன்றைய ஆங்கிலேய அரசால் உருவாக்கப்பட்டது என்பதை என்னால் இயன்றவரைக்கும் சிறப்பாகச் சொல்லியிருந்தேன் என நினைக்கிறேன்.

     இந்தப் பதிவில் முல்லைப்பெரியாறு அணையை ஒரு மிகப்பெரிய அரசியல் சூழ்ச்சிக்கு இரையாக்கிதன் பிண்ணனியையும்,அதற்கான காரணத்தையும் விரிவாகத் தருகிறேன்.
   
   முல்லைப்பெரியாறு அணியிலிருந்து 50 கி.மீ தொலைவில்   கி.பி.1975 ஆம் ஆண்டு கேரள அரசு  இடுக்கி அருகில் குறவன்,குறத்தி மலைகளுக்கு இடையில் கேரள மின்வாரியத்திற்காக ஒரு அணையைக்கட்டியது.அந்த அணை கட்டப்பட்டதன் நோக்கம் மின்சாரம் தயாரிப்பதற்காக மட்டுமே.வேறு எந்த விவசாயப்பணிகளுக்காகவும் இல்லை.காரணம் பெரியாறு பாயும் பகுதிகள் அனைத்துமே மலைப்பாங்கான பகுதிகள் தான் இந்த அணையின் நீரால் அங்கு எந்தவொரு விவசாயப்பணிகளும் நடைபெறாது.
அந்த அணையின் மொத்த நீர்வரத்தும் பெரியாற்றையே நம்பி இருந்தது.அணையின் மொத்தக்கொள்ளளவு 70.5 டி.எம்.சி.அந்த அணை கட்டிய காலம் தொட்டு இன்றுவரை அந்த அணை இன்று வரை அதன் மொத்தக் கொள்ளளவை எட்டவேயில்லை.


இடுக்கி அணையின் தோற்றம்

   கேரள அரசு இடுக்கி அணையைக்கட்டிய போது  மிகப்பெரும் எதிர்பார்ப்போடு கட்டியது.750 மெகாவாட் மின் உற்பத்தியை கணக்கிட்டுத்தான் இந்த அணை கட்டப்பட்டது.நிலைமை இவ்வாறிருக்க அணைக்குப் போதிய நீர்வரத்துயின்மையால் எதிர்பார்த்த மின் உற்பத்தியை எட்ட முடியவில்லை.இந்த நிலையில் கேரள அரசின் பார்வை முல்லைப்பெரியாறு அணை மீது விழுந்தது.

 
   கேரளாவிலிருந்து வெளிவரும் மலையாள மனோரமா எனும் நாளிதழ்  16.10.1979 அன்று முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்து என்று ஒரு பொய்யான செய்தியைப் பிரசுரித்தது.அன்று வரை என்ன செய்வது எனத்தெரியாமலிருந்த கேரளா அரசு இந்தச் செய்தியை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொங்க ஆரம்பித்தது.அதுவரை 152 அடி தண்ணீர் தேக்கிவந்த தமிழக அரசுக்கு எதிராக கேரள அரசு அணை ஆபத்தாக இருக்கிறது என்றும்,அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க வேண்டும் என்றும் கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தது.மேலும் முல்லைப்பெரியார் ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றும் கூறியது.


     அந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு அணையை பலப்படுத்துமாறும் அதுவரை அணியின் நீர்மட்டத்தை 142 அடி வரை நீர்தேக்கவும் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவையும் அணையின் கீழே வசிக்கும் மக்களின் பாதுகாப்பையும் முன்னிறுத்தி தமிழக அரசு மனப்பூர்வமாக ஏற்றது.

    ஒப்பந்த மறுபரிசீலனை விஷயத்தை இரு மாநில முதல்வர்கள் மட்டத்தில் பேசித் தீர்த்துக்கொள்ளுமாறும் பரிந்துரைத்தது.



 

      இதன்படி அணையை  மூன்று வழிகளில் பலப்படுத்தத்துவங்கியது.


1.அவசர கால நடவடிக்கைகள்:

  இதன் படி அணையில் கேபிள் ஆங்கரிங் முறையில் அணையின் தடுப்புச்சுவர்களின் இடையில் துவாரங்கள் அமைக்கப்பட்டு அணையின் மொத்த உயரத்திற்கும் ,நீளத்திற்கும் சிறு சிறு இடைவெளியில் அணையின் அடிப்பகுதியில் உள்ள பாறைகள் வரை கேபிள் ஆங்கரிங் செய்யப்பட்டு அந்தத் துளைகள் அனைத்தும் கான்க்ரீட்  கலவைகளால் நிரப்பப்பட்டது.

2.இடைக்கால நடவடிக்கைகள்:

 இதன்படி அணையின் தடுப்புச்சுவர்கள் மிகவும் உறுதியான வகையில் கான் க்ரீட் கலவைகளால் அணையின் மொத்த நீளத்திற்கும் கட்டப்பட்டது.அணையின் மேல்பகுதியில் கைபிடிச்சுவர்கள் அமைக்கப்பட்டன.

3.இறுதிக்கட்ட நடவடிக்கைகள் :

 இதன்படி பேபி அணையைப் பலப்படுத்துதலும்,நீர் வெளியேற்றும் ஷட்டர்கள் கூடுதலாக அமைக்கப்பட்டு அணையின் நீர்வெளியேற்றும் திறன் வினாடிக்கு 1,25,000 கனஅடியாகவும் உயர்த்தப்பட்டது {அதற்கு முன் அணையின் நீர் வெளியேற்றும் திறன் வினாடிக்கு 85,000 கனஅடியாகத் தான் இருந்தது}

என்ற அளவில் அணையைப் பலப்படுத்தியது.

    இதற்காகத் தமிழக அரசு ரூ 20 கோடி ஒதுக்கியது.இந்தப்பணிகள் 1981 ஆம் ஆண்டு தொடங்கி 1995 ஆம் ஆண்டுவரை நடைபெற்றது.

 

அணையின் நீர் வெளியேற்றுப்பகுதிகள்

2.8.11

முல்லைப் பெரியாறு அணை வரலாறு

முல்லைப்பெரியாறு அணை


இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி

     முல்லைப் பெரியாறு அணை என்பது தென் தமிழக மக்களின் முக்கியமான நீர் ஆதாரங்களில் ஒன்று.குறிப்பாக தேனி,மதுரை,திண்டுக்கல்,சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டமக்களின் குடிநீர்,விவசாயத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முக்கியமான அணையாகும்.

      கி.பி.19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் தென் தமிழகம் மிகப்பெரிய வற்ட்சியை எதிர்கொண்டது.அதிலும் குறிப்பாக சிவகங்கை,ராமநாதபுரம் மாவட்டங்கள் மிகப்பெரிய பஞ்சத்தின் பிடியில் சிக்கிக்கொண்டது.அப்போதைய இராமநாதபுரம் ராஜா சேதுபதி அவர்கள் இதற்கான தீர்வாக நீர் ஆதாரங்களை வலுப்படுத்தும் நோக்குடன் தமது அமைச்சரவையிலிருந்த திரு,முத்துஇருளப்பபிள்ளை என்பவர் தலைமையில் ஒரு குழு அமைத்து தமிழகத்தின் மேற்குப்பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சிமலைப்பகுதியிலிருந்து உற்பத்தியாகும் நதிகளால் தமிழகத்தில் தென்மாவட்ட மக்களின் அத்தியாவசியப் பிரச்சினையான தண்ணீர்ப் பிரச்சினையைத்  தீர்க்க முடியுமா? என்பதற்கான ஆய்வு நடத்துமாறு பணித்தார்.

     அந்தக் குழுவானது ஆய்வுசெய்து மேற்குத்தொடர்ச்சிமலையின் மேற்குப்பகுதியில் உள்ள கேரளாவில் அளவுக்கதிகமான மழைபொழிந்து தண்ணீர் வீணாகக் கடலில் கலப்பதாகவும்,அந்த நீரை இந்தப்பக்கம் திருப்பினால் தென் மாவட்டமக்களின் தண்ணீர் பிரச்சினை தீருமென்றும் கூறியது.இதில் முக்கியமாக திருநெல்வேலி மாவட்டத்தின் சிவகிரி மலைப்பகுதியில் உற்பத்தியாகும் முல்லையாறு மேற்கு நோக்கி ஓடி கேரளாவில் உள்ள பெரியார் நதியுடன் கலப்பதாகவும் அந்த நதியை தமிழ்நாட்டிற்குத்திருப்பினாலே போதும் என்றும் பரிந்துரைத்தது.

      இந்த விவரங்களுடன் மன்னர் சேதுபதி அப்போதைய சென்னை ஆளுநருக்கு தென்மாவட்ட மக்களின் நிலைமையை விளக்கியும்,அவர் கண்ட தீர்வையும்

திருவிதாங்கூர் ராஜா

மேற்கோள் காட்டி ஒரு கடிதம் எழுதினார்.அதனடிப்படையில் சென்னை ஆளுநர் அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தான ராஜாவிடம் பேசியபோது முதலில் அவர்கள் மறுத்துவிட்டனர். அதன்பிறகு கி.பி.1887 ம் ஆண்டு மறுபடியும் திருவிதாங்கூர் மன்னரிடம் ஒப்பந்த முறையில் அதாவது கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் பெரியாற்றின் குறுக்கே ஒரு அணையைக்கட்டி  அதிலிருந்து தண்ணீரை தமிழ்நாட்டிற்குக் கொண்டுசெல்வது எனவும்,அந்த அணையின் நீர்பிடிப்புப் பகுதியையும்,அணை அமையும் இடத்திற்குமான நிலப்பரப்பான சுமார் 8500 ஏக்கர் நிலப்பகுதியை சென்னை மாகாண அரசிடம் 999 வருடத்திற்கு குத்தகைக்குக் கொடுப்பது எனவும் ஒப்பந்தம் செய்யப்பட்டது.

 

கர்னல் "பென்னிகுயிக்"

     அதன்பின் சென்னை அரசாங்கம் கர்னல் பென்னிகுயிக் என்ற ஆங்கிலேயப்பொறியாளரின் தலைமையில் அணைக்கட்டுவதற்கான பொறுப்பையும்,நிதியையும் வழங்கியது. அந்தக்குழுவானது அணைக்கட்ட ஆரம்பித்த புதிதில் 
மிகப்பெரும் சவால்களை எதிர்கொண்டது. அதற்கான காரணங்கள்.

 1. அது மிகப் பெரிய அடர்ந்தகாட்டுப்பகுதி.

 2.காட்டு மிருகங்கள் யானை,புலி மற்றும் விஷ ஜந்துக்களின் தொல்லை.

 3.தீடிரென ஏற்படும் காட்டாற்று வெள்ளம்.

  இவற்றால் பென்னிகுயிக் தலைமையில் அமைத்த குழுவினரால் குறிப்பிட்ட காலத்திற்குள் அணையைக்கட்ட இயலவில்லை,மேலும் கட்டிய அணையும் தீடீர்,தீடீரெனத் தோன்றும் காட்டாற்று வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதால் ஆங்கில அரசு ஒதுக்கிய நிதியும் தீர்ந்துவிட்டது.மறுபடியும் பென்னிகுயிக் ஆங்கில அரசிடம் கோரிக்கை வைத்தபோது அவர்கள் நிதி ஒதுக்க மறுத்துவிட்டதால் பென்னிகுயிக் அவர்கள் இங்கிருந்து இங்கிலாந்து சென்று தனது பூர்வீகச் சொத்துக்களையெல்லாம் விற்று அந்தப்பணத்தைக்கொண்டுவந்து மிகவும் கஷ்டப்பட்டு இந்த அணையை  கட்டினார். இந்த அணையின் நீர்பிடிப்புப் பகுதியின் உள்ளே சிறு,சிறு தடுப்பணைகளை கட்டி திடீரெனத் தோன்றும் காட்டாற்று வெள்ளத்தின் வேகத்தைக் குறைத்து முக்கிய அணைக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் மிகவும் அறிவார்ந்த முறையில் இந்த அணையை கி.பி.1895 ம் ஆண்டு  கட்டி முடித்தார்.அணையை அப்போதைய சென்னை ஆளுநர் பென்லாக் பிரபு திறந்துவைத்தார்.



முல்லைப் பெரியாறு அணையின் எழில்மிகு தோற்றம்

   அணைகட்டி முடிக்கப்பட்டபோது  அணையின் உயரம் 156  அடி உயரத்திற்கு தண்ணீர் தேக்குமளவிற்கு அணையின் நீர்மட்டம் நிர்ணயம் செய்யப்பட்டது.அணையின் மொத்தக் கொள்ளளவு 17 டி.எம்.சி மட்டுமே. இது நமது மேட்டூர் அணையின் கொள்ளளவை விட 5 மடங்கு குறைவு{மேட்டூர் அணை பற்றி மற்றுமொரு பதிவில் வெளியிடுகிறேன் அது மிகப்பெரிய பதிவு}.இந்த அணையே  தற்போது 3 பிரிவுகளாக பயன்பாட்டில் உள்ளது.

  1.முக்கிய அணை {இது ஒரு மிகப்பெரிய தடுப்பணை தானே தவிர இதன் வழியாக தண்ணீர் வெளியேற்ற முடியாது.}

 2.பேபி அணை {இதன் வழியாகத்தான் கேரளப் பகுதிக்குத் தண்ணீர் திருப்பிவிடப்படுகிறது.அணையின் நீர்மட்டம் 112 அடியைத் தாண்டினால் மட்டுமே இந்தப்பகுதிக்குத் தண்ணீர் வரும்}

 3.தமிழ்நாட்டிற்குத்தண்ணீர் திறக்கப்படும் மதகுகள் கொண்ட மூன்றாவது பகுதி {அணையின் நீர்மட்டம் 104 அடிக்கு மேல் இருந்தால் மட்டும் தான் தமிழகத்திற்கு தண்ணீர் எடுக்கமுடியும்,இல்லையெனில் தமிழ்நாட்டிற்கு எடுக்க முடியாது.104 அடிக்குக்கீழ் தண்ணீர் சென்றால் அது கேரளாவிற்குத்தான் பயன்படும்}

    இந்த அணையிலிருந்து தமிழகம் தண்ணீர் எடுக்கும் விதம் மிகவும் வித்தியாசமானது.பெரியார் அணையை சுற்றியுள்ள மலைப்பகுதியைக் குடைந்து மிகப்பெரிய சுரங்கங்கள் அமைத்து அதன் வழியாக மிகப்பெரிய நான்கு இராட்சதக் குழாய்கள்{இந்தக் குழாய்கள் நாம் கூடலூரிலிருந்து குமுளி செல்லும் மலைப்பாதையில் இரண்டு முறை குறுக்கிடும்.}மூலம் தமிழகப் பகுதிக்குத் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.அந்தத் தண்ணீரானது தமிழக எல்லையான லோயர்கேம்ப் அருகில் சுருளியாற்றுடன் இணைக்கப்படுகிறது.அங்கிருந்து தான் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதிக்கு பாசனத்திற்காகவும்,குடிநீருக்காகவும் தண்ணீர் செல்கிறது.

     கர்னல் பென்னிகுயிக் இந்த அணையைக் கட்டுவதற்காக தன் சொத்துக்களை விற்றதன்  நோக்கமே அப்போதைய தென் தமிழகத்தில் நிலவிய வறட்சி தான் முக்கியக் காரணம்.இந்த அணையால் தான் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய பாசனப்பகுதியான கம்பம் பள்ளத்தாக்கு பகுதி பயனடைகிறது.
மேலும் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் நெல்,திராட்சை மற்றும் முக்கியப்பணப் பயிர்கள் அனைத்தும் விளைவிக்கப்படுகிறது.அந்தப் பகுதி மக்களின் முக்கிய வாழ்வாதாரமே இந்த அணைதான்.




இயற்கைசூழ் அணையின் நீர்த்தேக்கப் பகுதி

     இந்த அணை அமைந்துள்ள பகுதியானது கேரளப்பகுதியிருந்தாலும் அந்த அணையின் பராமரிப்பு முழுவதும் தமிழகத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.அணை சார்ந்த அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கென ஒரு பொறியாளர் குழுவும்,அவர்களின் குடும்பத்தினர் தங்குவதற்கான குடியிருப்புகள் அனைத்துமே தேக்கடியில் உள்ளன.அணையானது குமுளியிலிருந்து 16 கி.மீ தொலைவில் உள்ளது. அணையின் பாதுகாப்புப் பணியில் கேரள மாநிலக் காவல்துறையும்,வனத்துறையும் உள்ளன.மீண்டும் ஒருமுறை ஞாபகப் படுத்துகிறேன் தண்ணீர் தேங்கும் நிலப்பரப்பிற்கு குத்தகையானது தமிழக அரசால் இன்று வரை கேரளாவிற்கு வழங்கப்பட்டு வருகிறது.

     அந்த நீர்த்தேக்கத்தில் தான் கேரள அரசானது தேக்கடியில் படகுப்போக்குவரத்து நடத்தி ஆண்டுதோறும் மிகப்பெரும் வருமானத்தை ஈட்டி வருகிறது,அந்த அணை சார்ந்த பகுதிகளில் மீன் பிடிக்கும் உரிமையையும் தமிழகம் அவர்களுக்கு வழங்கியுள்ளது.

    1979 ம் ஆண்டிலிருந்து கேரள அரசும் அங்குள்ள சில பத்திரிக்கைகளும் முல்லைப்பெரியார் அணைக்கு எதிராக செயல்பட்டு வருகின்றன.

    இதன் காரணம் என்ன?

    இத்தனை விட்டுக்கொடுத்தும் கேரள அரசு தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கக் காரணம் என்ன?

    தென் தமிழகத்தையே பாலைவனமாக மாற்ற முயற்சிப்பதன் பின்னணி என்ன?.
 
   இத்தனை சுதந்திரத்தையும் அவர்களுக்கு வழங்கியும் தமிழகத்தை ஏமாற்றமுயற்சிப்பதேன்?


    இது விஷயம் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கங்களை மற்றுமொரு பதிவில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

  அதுவரை நன்றியுடன்..........................
  

 
    

    
   

25.7.11

தமிழ் மொழி

"யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்
  இனிதாவதெங்கும் காணோம்"

   இது புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வைரவரிகள்.

          இது தமிழ்மொழி பற்றி கவிஞர் கருத்து.

      ஆனால் இன்று அனைவரையும் ஆங்கில மோகம் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது.தாய் மொழிக்கல்வியை அனைவருமே நிராகரித்து வருகின்றனர்.சில வருடங்கள் வரை நகர்ப்புறங்களில் மட்டுமே நிலவிய இந்தக் கொடுமை தற்போது கிராமப்புற மக்களிடமும் வேகமாகப் பரவிவருகிறது.

      இதன் விளைவு என்ன என்பதற்குக் காலம் தான் பதில் சொல்லவேண்டும்.தற்போது கிராமப் புறங்களில் இருந்த ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் அனைத்தும் மூடுவிழாவை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றன.

     இனிவரும் காலங்களில் தமிழ் மொழி அடியோடு அழிந்துவிடும் என்ற ஐயம் தமிழார்வலர்களிடையே மேலோங்கி வருகிறது.

     நாமும் நம்மால் இயன்றவரை முயன்று தமிழ்மொழியின் பெருமை காப்போம்...